Jun 13, 2013

Magnolia (1999) (18+)


டிஸ்கி: இந்தப் பதிவில ஸ்பாய்லர்கள் கிடையாது.ஸோ தைரியமா படிங்க.

ப்ளாக் ஆரம்பிச்சு மொத்தமா 10 பதிவு தாண்டலை. ஆனா அதுக்குள்ள இந்த மாதிரி ஒரு படத்துக்கு என்னோட பார்வையை எழுதுறது கொஞ்சம் அதிகப் பிரசங்கித்தனமா தான் தெரியுது. பால் தாமஸ் ஆண்டர்சன் மாதிரி ஆட்களப் பத்தி எழுத "கொழந்த" அண்ணன் அல்லது கருந்தேளார் மாதிரி பழந்தின்னு கொட்டை போட்டவங்க(!!) எழுதுனா தான் நல்லா புரிஞ்சுக்க முடியும். இருந்தாலும் எனக்கு இந்தப் படம் எப்பிடி இருந்துச்சுனு சொல்லிடறேன். மேலதிக விவரங்களுக்கு மேலே சொன்னவங்களுக்கு கடுதாசி போட்டு தெரிஞ்சுக்கலாம். இப்போ படம்..,

படங்கள, ரசிகர்கள வச்சு மூணு விதமா பிரிக்கலாம். ஒன்னு, எல்லாவிதமான ரசிகர்களுக்கும் ரொம்ப பிடிச்ச படம்(உதாரணம் - சிவாஜி, தேவர்மகன், அலைபாயுதே). ரெண்டு, யாருக்குமே பிடிக்காத படம்(உதாரணம் - பாபா, மும்பை எக்ஸ்பிரஸ், ராவணன்). மூணு, கொஞ்ச பேருக்கு ரொம்ப பிடிச்சுருக்கும் (இந்த மாதிரி படம் எடுக்க இனிமே இன்னொருத்தன் பொறந்துதான்யா வரனும்னுவாங்க) கொஞ்ச பேருக்கு சுத்தமா பிடிச்சுருக்காது (என்னயா படம் எடுத்துருக்காய்ங்க மொக்கய போட்டு சாவடிச்சுட்டாய்ங்கனுவாங்க) (உதாரணம் - எந்திரன், விஸ்வரூபம், ஆய்த எழுத்து).

மேக்னோலியா இதுல மூணாவது வகை. பாதிப் பேரு இந்தப் படம் ஒரு கல்ட் க்ளாசிக் படம்ங்கறாங்க. பாதிப்பேரு தயவு செய்து இந்தப் படத்த பாத்து 3 மணி நேரத்த வேஸ்ட் பண்ணாதிங்க-ன்றாங்க. இதுல நான் எந்த வகை..? அதுக்காண்டிதான் இந்தப் பதிவே..!!

'மேக்னோலியா'-ங்கற தெருவுல வாழ்ந்துகிட்டுருக்கற 12 பேரோட வாழ்க்கையில, ஒரு நாள்ல நடக்குற சம்பவங்கள் அவங்க வாழ்க்கைப்பயணத்த, எப்டியெல்லாம் திசை திருப்புதுங்கறதுதான் மொத்தப் படமே. படம் மொத்தம் 3 மணி நேரத்துக்கு மேல. கடைசி முக்கால் மணி நேரத்த தவிர படம் முழுக்க நல்லா வேகமாதான் போகுது. விறுவிறுப்பாவும் இருக்கு. கடைசில தான் கொஞ்சம் ஸ்லோலோலோஓஓஓ ஆன மாதிரி தெரிஞ்சது. அது கூட அவ்ளோ நேரம் வேகமா போயிட்டு இருந்தது போரடிச்சுப் போயி, ஸ்லோவானது நல்லா தான் இருந்துச்சு. சரி யாரந்த 12 பேரு..?? படம் பாக்காதவங்க இந்த 12 பேரும் யாருனு தெரிஞ்சுக்கிட்டுப் பாத்தா கொஞ்சம் ஈஸியா இருக்கும்னு தோணுது. ஏன்னா, முதல் 20 நிமிஷத்துக்கு எனக்கு ஒன்னுமே புரியல. கொஞ்சம் கொஞ்சமா தான் புரிஞ்சது. நான் பெற்ற துன்பத்த இந்த வையகம் பெறக்கூடாதுங்கற நல்ல எண்ணத்துல இங்க அந்த 12 கேரக்டர்ஸும் யாரு என்னானு ஒரு குறிப்பு கொடுத்துருக்கேன். என்சாய்..

1.Earl Partridgeகேன்சர் நோயால் படுத்த படுக்கையாக இருக்கும் ஒரு பணக்காரர். தனது வாழ்நாளை எண்ணிக்கொண்டிருக்கிறார். முதல் மனைவியையும் அவரது ஒரே பையனையும்,முக்கியமான சந்தர்ப்பத்தில் விட்டுவிட்டு ஓடிப்போய் இன்னொரு திருமணம் செய்து கொண்டவர். அதற்காக தற்போது வருத்தப்பட்டுக் கொண்டிருப்பவர்.

2.Linda Partridge - Earl-ன் இளம்(இரண்டாவது) மனைவி. பணத்துக்கு ஆசைப்பட்டு கல்யாணம் செய்துகொண்டவள். இளமையாக இருப்பதால் புருஷனுக்கு துரோகமும் பண்ணியவள். ஆனால் தற்போது தனது தவறை உணர்ந்து வருந்திக் கொண்டிருப்பவள்.

3.Phil Parma - Earl-ஐ கவனித்துக்கொண்டிருக்கும் ஆண் நர்ஸ். ரொம்ப நல்லவன். பொறுமையாக Earl சொல்லுபவற்றை காது கொடுத்து கேட்பவன்.

4.Frank T.J. Mackey - Earl-ன் முதல் மனைவியின் பையன். தனது அப்பா தன்னையும், அம்மாவையும் விட்டுவிட்டு ஓடியதில் அப்பா மீது கடுங்கோபத்தில் இருப்பவன். 14 வயதிலேயே அம்மாவையும் இழந்தவன். தற்போது "பெண்களைக் கவர்வது எப்படி" என செமினார் எடுக்கும் செக்ஸ் குரு. பெண்களைப் போகப் பொருளாக நினைப்பவன்.

5.Jimmy Gator - Earl தயாரிக்கிற ஒரு டிவி கேம் ஷோ "What Do Kids Know". இத 30 வருடங்களா தொகுத்து வழங்குபவர் ஜிம்மி. இவரும் கேன்சரால பாதிக்கப்பட்டு இன்னும் 2 மாதங்கள்ல சாக இருப்பவர்.

6.Rose Gator - Jimmy Gator-ன் மனைவி. தனது கணவருக்கும் பொண்ணுக்கும் இடையில நடக்கும் சண்டை எதுக்காகனு புரியாம தவிச்சுகிட்டு இருப்பவள்.

7.Claudia Wilson Gator - Jimmy Gator-ன் பொண்ணு. தனது அப்பாவை ஒரு குறிப்பிட்ட காரணத்துக்காக வெறுப்பவள். போதை மருந்துக்கு அடிமையாகி தனிமையில் வாழ்பவள்.

8.Stanley Spector - "What Do Kids Know" கேம் ஷோவின் தற்போதைய பிரபலமான நட்சத்திரம். குட்டிப்பையன். நிறைய விஷயங்கள் தெரிந்தவன். எல்லா பொது அறிவுக் கேள்விகளுக்கும் விடை தெரிந்தவன்.

9.Rick Spector - Stanley Spector-ன் அப்பா. பிரபலமான நடிகர். தனது பையன் இன்னும் நிறைய கேம் ஷோக்களில் வெற்றி பெற்று புகழ் சேர்க்க வேண்டுமென எதிர்பார்ப்பவர்.

10.Donnie Smith - "What Do Kids Know" கேம் ஷோவின் மாஜி பிரபலம். 30 வருடத்துக்கு முன்பு பிரபலமான குட்டிப்பையன். தற்போது பெரியவனாகி ஒரு தற்குறியாக வாழ்பவர். வேலையை விட்டு நிறுத்தப்பட்டு அதனால் வெறுப்பில் இருப்பவர்.

11.Officer Jim Kurring - வாழ்க்கையில் பிடிப்பின்றி தனிமையில் வாழ்ந்து கொண்டிருக்கும் போலிஸ் ஆபிசர். நல்லவன் ஆனால் பயந்தாங்கொள்ளி.

12.Rap பாடும் சிறுவன் - Officer Jim-க்கு ஒரு கொலையில் கொலையாளியைக் கண்டுபிடிக்க உதவுபவன். ராப் வகை பாடல் பாடுவதில் ஆர்வமுள்ளவன்.

அவ்ளோதாங்க.. இந்த 12 பேருக்கிடையில ஏதோ ஒரு வகையில் ஒரு கனெக்சன் இருக்கு. இவர்கள் வாழ்க்கையின் ஒரு நாளில் நடக்கும் சில சம்பவங்களை வைத்தே பல விஷயங்களை நமக்கு சொல்லிருக்காரு டைரக்டர். ஏமாற்றம், வெறுப்பு, தனிமை, நம்பிக்கை, சந்தோஷம்,வருத்தம், மன்னிப்பு, பாவம், தோல்வி, துயரம், வலி என மனித வாழ்க்கையின் பல அம்சங்களை சிறு சிறு சம்பவங்கள் மூலமா விவாதித்திருக்கிறார். படம் ஆரம்பத்திலிருந்து ஒவ்வொரு கேரக்டரும் எப்படி இன்னொரு கேரக்டரோடு தொடர்பு படுத்தப்படுதுனு ரொம்ப அழகா சொல்லிருப்பாரு.

எதிர்பாராத, நம்ப முடியாத, அரிதான,அசாதாரணமான சம்பவங்கள் உலகத்துல அப்பப்போ நடந்துகிட்டுதான் இருக்கும். நம்ப முடியாதே தவிர, உண்மையாவே நடந்த சம்பவங்களா இருக்கும். அந்த மாதிரி சில சம்பவங்களை அறிமுகப்படுத்துறதோட ஆரம்பிக்கற படம் அதே மாதிரி முடியும்போது நம்மால நிஜமாவே நம்ப முடியாததா இருக்கும். இந்த சம்பவங்கள்லாம் தன்னிச்சையாவோ அல்லது தற்செயலாவோ நடந்திருக்கும்னு நாம நினைப்போம். ஆனா அது எல்லாம் அப்படி கிடையாது. அதுக்கெல்லாம் ஒரு காரணம் இருக்கு.

இது தான் படத்தோட அடி நாதம்.என்னங்க..மண்ட கொழம்புதா..??(எதுக்கும் இன்னொரு தபா படிச்சிருங்க.. எழுதுன எனக்கே ரொம்பக் கொழப்பமா தான் இருக்கு) அப்பறம் பைபிள்லருந்து ஒரு வசனம்,
Exodus 8:2 And if thou refuse to let them go, behold, i will smite all thy borders with frogs.
இந்த வசனம் எதுக்குனு படத்தோட கடைசில வர்ற அந்த அருமையான க்ளைமேக்ஸ் அப்போ தான் தெரியும். படத்துல ஆரம்பத்திலிருந்தே இந்த பைபிள் வசனத்துக்குரிய பல குறியீடுகள் வந்துகிட்டே இருக்கும் கிட்டத்தட்ட 100 தடவைகளுக்கும் மேல வரும். செத்துப்போன எங்க தாத்தா சத்தியமா சொல்றேன் முதல் தடவை பாக்கும் போது நாம அதலாம் கவனிச்சிருக்க மாட்டோம். அடுத்தடுத்து பாக்கும்போதுதான் புதுசு புதுசா நிறைய விஷயங்கள் தெரிய வரும். Exodus 8:2 இதுல 2 மற்றும் 8 இந்த ரெண்டு நம்பர்களும் படத்துல பல இடங்கள்ல மறைமுகமாவோ அல்லது நேரடியாவோ குறியீடுகளா வரும். இதையும் கவனிச்சிருக்க மாட்டோம்.

இடையில ஒரு பையன் ராப் பாடல் ஒண்ணு பாடுவான். (அதபத்தி நம்ம இசை இளவரசன் கொழந்த அண்ணன் கொஞ்சம் விளக்கம் கொடுத்தா நல்லா இருக்கும்). படம் பாக்கும்போது இந்தப் பாட்டு என்னாத்துக்கு இப்போ இங்க வருதுனு ஒரே கொழப்பமா இருக்கும். சம்பந்தமே இல்லாத மாதிரி இருக்கும்.(தமிழ் படங்கள்ல வர்றத விடவா..???!!) ஆனா அந்தப் பாட்டு என்னா மேட்டர்னு கடசில தான் தெரிய வரும். அப்படியும் தெரிலனா நெட்ல தேடித் தெரிஞ்சிக்கங்க(ஹோம் வொர்க்). நான் அப்படி தேடிதான் தெரிஞ்சிக்கிட்டேன்.

அதேபோல படத்துல 4 இடங்கள்ல "Raining Cats and Dogs" னு மாத்தி சொல்லுவாய்ங்க. அதே போல பூனைக்குட்டிகளும், நாய்களும் படத்துல பல இடங்கள்ல குறியீடுகளா வரும். என்னடா இது ? திடீர்னு என்னென்னமோ சொல்றானேனு பாக்காதிங்க. இந்த டவுட்டுலாம் படம் முடியும்போது க்ளியர் ஆயிடும். எனக்குத் தெரிஞ்சு ஒரே படத்துல பல குறியீடுகள் இருந்து நான் பாத்தது இதுல தான். இதுலாம் எதுக்குன்னா படத்தோட க்ளைமேக்ஸ நியாயப்படுத்தறதுக்கு தான். அப்படி என்னா க்ளைமேக்ஸ் பொல்லாத க்ளைமேக்ஸ்..? அத நீங்க படம் பாத்துதான் தெரிஞ்சுக்கனும். இல்லன்னா சுவாரசியம் போயிடும்.

பல பேரோட வாழ்க்கையில நடக்குற பல பிரச்சனைகள ஒரு நம்ப முடியாத,எதிர்பாராத, அசாதாரண சம்பவம் ஒண்ணு திசைதிருப்புது. பிரச்சனைகளுக்கு ஒரு முடிவக் கொடுக்குது. அந்த சம்பவம் தான் க்ளைமேக்ஸ். ஆனா இங்கன தான் பிரச்சனையே. படம் கல்ட் க்ளாசிக்னு பேர் எடுத்ததுக்கும் இந்த க்ளைமேக்ஸ் தான் காரணம். மரண மொக்கைனு பேர் எடுத்ததுக்கும் இந்த க்ளைமேக்ஸ் தான் காரணம். அதனால உங்களுக்கு எந்த மாதிரி இருக்குனு முடிவ உங்க கைலயே கொடுத்துடறேன்.

இந்த லாங் ஷாட்டுகள் பிடிக்குமா உங்களுக்கு ? ரொம்ப நேரத்துக்கு சீன் கட் ஆகாம தொடர்ச்சியா வர்றது. எனக்குத் தெரிஞ்சு இந்தப் படத்துல தான் லாங் ஷாட்டுகள் அதிகமா இருக்கு. அதுவும் அவ்ளோ அருமையா எடுத்துருப்பாய்ங்க. நான் ரொம்ப ரசிச்சு லயிச்சு பாத்த ஒரு லாங் ஷாட், "What Do Kids Know" கேம் ஷோ-வுக்கு வர்ற Stanley Spector-ம் அவனது அப்பாவும் கார்ல இருந்து இறங்கி உள்ளே ஷோ நடக்குற ஸ்டேஜ்க்கு போற வரைக்கும் வர்ற காட்சி. அதுவும் ஒரே வேகத்துல கேமரா மூவ் ஆகும். எப்பிடி இந்த காட்சிய எடுத்தாய்ங்க..? எவ்ளோ பேரை கட்டி மேய்க்கனும்.. எத்தன தடவ ரிகர்சல் பாத்துருப்பாய்ங்க..னு நினைக்கும் போதே ஆச்சரியமா இருக்கு.

கிட்டத்தட்ட 2 நிமிடங்களுக்கும் மேல கட் ஆகாம வர்ற அந்த சீன இங்கன கண்டுக்கங்க.



இந்தபடத்துல எனக்குப் பிடிச்ச இன்னொரு காட்சி. Phil Parma ஆன்லைன் ஷாப்பிங்குக்கு கால் பண்ணி முதல்ல ப்ரெட், பீனட் பட்டர், சிகரெட்  எல்லாம் ஒவ்வொண்ணாஆர்டர் பண்ணுவார். அப்பறம் கொஞ்சம் தயங்கிக்கிட்டே "உங்ககிட்டே ப்ளேபாய் மேகசின் இருக்கா? அது ஒண்ணு வேணும்..அப்பறம்...பெந்த்ஹவுஸ் மேகசின் இருக்கா ? அது ஒண்ணு.. அப்பறம் ஹஸ்ட்லர் மேகசின் இருக்கா? உண்மைலயே இருக்கா? சரி..அது ஒண்ணு" னு ஆர்டர் பண்ணுவாரு. (அந்த 3 மேகசின்களும் பிட்டு புக்குனு நம்ம எல்லாருக்கும் தெரியும்ல..) பொறுமையா எல்லாத்தயும் கேட்டுகிட்ட சேல்ஸ்கேர்ள் "உண்மைலயே உங்களுக்கு ப்ரெட், பீனட் பட்டர், சிகரெட் லாம் வேணுமா" னு கேப்பா. செம காமெடி போங்க. நான் சொல்றத காட்டிலும் இந்த சீன படத்துல பாக்கும்போது உங்களுக்கே புரியும்.

படத்துல ஒளிப்பதிவு பத்தி சொல்லியே ஆகனும். படம் மொத்தம் 3 மணி நேரம். ஆனா அது நமக்கு தெரியாத அளவுக்கு விறுவிறுப்பா போகுதுனா அதுக்கு ஒளிப்பதிவும் ஒரு முக்கிய காரணம். சில படங்கள்ல கேமரா மூவ்மென்ட் கம்மியா இருக்கும் அல்லது ரொம்ப வேகம் குறைவா இருக்கும். அதனால 2 மணி நேரப்படம் கூட ரொம்ப நேரம் மாதிரி தெரியும். (உதாரணம் பல குவண்ட்டின் படங்கள்) சில படங்கள்ல கேமரா ஒரு இடத்துலயே இருக்காது. பயங்கரமான மூவ்மென்ட் இருக்கும். அதனாலயே படத்தோட நீளம் தெரியாது. (உதாரணம் நோலனின் அனைத்து படங்களும். பரபரனு காட்சி போய்கிட்டே இருக்கும்). படத்தோட இந்த விறுவிறுப்புக்கு எடிட்டிங் முக்கிய காரணம்னாலும் ஒளிப்பதிவும் ஒரு முக்கிய பங்கு வகிக்குதுங்கறது என்னோட அபிப்ராயம்.

இந்தப் படத்துல ஒளிப்பதிவும்,எடிட்டிங்கும் படத்தோட விறுவிறுப்பக் கூட்டுது. பிண்ணனி இசை, ஒலிக்கலவை, நடிகர்களின் நடிப்புனு எதுவுமே சோடை போகலை. அதுலயும் இந்த டாம்க்ரூஸ் இருக்காருல்ல. அந்தாளு நடிப்பு சொம்மா நின்னு விளையாடுது. நிஜமாலுமே இந்தப் படத்துல ஒரு மாறுபட்ட வேடத்துல டாம பாக்கலாம். இந்தாள ஒரு ஆக்சன் ஹீரோவாவே பாத்துட்டு இந்தப் படத்துல நடிக்கறதப் பாக்கும்போது உண்மைலயே நல்லா இருக்குங்க. நம்ம தனுஷ் "மயக்கம் என்ன" வும் நடிக்குறாரு. "மாப்பிள்ளை"யும் சூஸ் பண்றாருல்ல. அந்த மாதிரி ஹாலிவுட் பேரரசுகள்ட்ட மாட்டிட்டு ஆக்சன் ஹீரோவாவே வாழ்க்கைய முடிச்சு விட்டாரு.

மத்த ஒவ்வொருத்தருமே தங்களோட பெஸ்ட் நடிப்பைக் கொடுத்துருக்காங்க. சிறந்த இசை, சிறந்த திரைக்கதை, சிறந்த துணைநடிகர்(டாம் க்ரூஸ்) னு 3 ஆஸ்கர் அவார்ட்களுக்கு நாமினேட் ஆச்சு. ஆனா ஒன்னியும் வாங்கலை. ஏன்னா அந்த வருஷம் வந்த "American Beauty", "Matrix" போன்ற படங்கள் அவார்ட்கள அள்ளிட்டுப் போயிடுச்சு. பால் தாமஸ் ஆண்டர்சனோட படங்கள்ல நான் பாக்குற முதல் படம் இது. அவரோட படங்கள்ல அவருக்கு பிடிச்ச படமும் இதுதானாம். அடுத்தடுத்து இவரோட மற்ற படங்களையும் பாக்கனும்.

இந்தப் படத்த உருவாக்கும்போது "க்ளாடியா" கேரக்டர் தான் முதல்ல உருவாக்குனாராம். அப்படியே அந்த கேரக்டர வச்சு அடுத்தடுத்து மத்த கேரக்டர்களயும் உருவாக்கிட்டாரு. அதே போல இந்தப் படத்துல இன்னொரு இன்ட்ரஸ்டிங்கான மேட்டர், மொத்தம் 190 தடவை "F**K" ங்கற கெட்ட வார்த்தைய உபயோகப்படுத்தியிருக்காங்க. ஸோ கண்டிப்பா இது 18 வயதுக்கு மேற்பட்டவங்களுக்கான படம். (சில ந்யூட் சீன்ஸ் கூட இருக்கு..!!)

இந்தப் படத்தப் பத்தி சொல்றதுக்கு இன்னும் நிறய விடயங்கள் இருக்கு. ஆனா க்ளைமேக்ஸ் பத்தி சொல்லாம எதயுமே சொல்ல முடியாது. ஆனா அத சொல்லிட்டா படத்தோட சுவாரசியம் போயிடும். அதனால மாப்பு இத்தோட என்னோட ரீலு ஸ்டாப்பு. படம் பாக்காதவங்க கண்டிப்பா பாருங்க. மிஸ் பண்ணிடாதிங்க. அடுத்த பதிவில சந்திப்போம்.

(பொன்னான உங்க கருத்துக்கள கொட்டுங்க அல்லது திட்டுங்க..!!)

12 comments:

  1. //spoilers included//
    good one..this definitely belongs to the third category that you have mentioned.one would either love it or hate it.the film started well and later became dull.the climax would make you say "what the .....".It was ridiculous.The film suddenly leaped into a different dimension and genre in the climax.vidiya vidiya the movie reveals the characters "heartbreak, regret, depression,loneliness and more regret" nu sollitu kadaisila vanatla irunthu tavala vilunthuchu sonna epdi irukum...i definitely felt the climax was ridiculous.taking 12 characters each having their own problems and making them cross each other at a point in the same day in a city was as good as how bad frog rain climax was

    ReplyDelete
    Replies
    1. முகேஷ்,

      அந்த மூனாவது கேட்டகிரிலயே 2 விதமான ரசிகர்கள் இருக்காங்க.. படம் ரொம்ப பிடிச்சவங்க, இன்னொன்னு படம் சுத்தமா பிடிக்காதவங்க..!! உனக்கு படம் பிடிக்கலனு தெரிது.. :)

      நான் சொன்ன மாதிரி அந்த க்ளைமாக்ஸ் தான், இந்தப் படம் மூனாவது கேட்டகிரிக்கு போக காரணம். உன்னோட கேள்விக்கு டைரக்டரோட ஒரு பதிலையே பதிலா தரேன்..

      "... It wasn't until after I got through with the writing that I began to discover what it might mean, which is this: you get to a point in your life, and s**t is happening, and everything's out of your control, and suddenly, a rain of frogs just makes sense. You're staring at a doctor who is telling you something is wrong, and while we know what it is, we have no way of fixing it. And you just go: 'So what you're telling me, basically, is that it's raining frogs from the sky.' .... [A]s far back as the Romans, people have been able to judge the health of a society by the health of its frogs: the health of a frog, the vibe of a frog, the texture of the frog, its looks, how much wetness is on it, everything. The frogs are a barometer for who we are as a people. We're polluting ourselves, we're killing ourselves, and the frogs are telling us so, because they're all getting sick and deformed. ..."

      அந்த க்ளைமாக்ஸ் ஒவ்வொரு கேரக்டர் வாழ்க்கையிலும் ஒரு மாற்றத்தைக் கொண்டுவருது. படத்துல வர்ற ஒவ்வொரு கேரக்டரும் அவங்களோட அமைதிய இழந்து நிம்மதிக்காக தவிக்கும்போது தான் அந்த க்ளைமாக்ஸ் வரும். அதுக்கப்புறம் எல்லாருக்குமே ஒரு அமைதி கிடைக்கும். அல்லது பிரச்சனைக்கு தீர்வு கிடைச்சுருக்கும். இது எத உணர்த்துதுனா, "கடவுள் நம்ம எல்லோரையும் கவனிச்சுட்டு இருக்கார். எப்போதெல்லாம் நாம பாவம், தவறு பண்றோமோ அப்போதெல்லாம் அவர் நமக்கு ஒரு வார்னிங் கொடுப்பார். எப்போ வேணும்னாலும், நமக்கு உதவி தேவைப்படறப்பலாம், நம்ம வாழ்க்கையில குறுக்கிட்டு உதவி பண்ணுவார்"

      இப்டி நினச்சுதான் டைரக்டர் எடுத்துருக்கறதா படுது. நான் இத எப்டி எடுத்துக்கறேன்னா, எப்போலாம் நமக்கு உதவி தேவைப்படுதோ அப்போலாம் யார் மூலமாவோ நமக்கு கண்டிப்பா உதவி கிடைக்கும். அத நாம எடுத்துக்கற விதத்துல தான் நம்மோட வெற்றியோ தோல்வியோ இருக்கும். சில விஷயங்கள நாம எப்பிடி பாக்க விரும்புறமோ அப்டி தான் பாக்க விரும்புவோம். உண்மை நம்ம கண்ணுக்குத் தெரியாது. ஆனா நாம அதை உணரும்போது அந்த விஷயத்த இழந்திருப்போம். இப்பிடி நிறைய மறைமுகமான கருத்துக்கள் பல இந்தப் படத்துல இருக்கு. ஒவ்வொரு கேரக்டரயும் தனித்தனியா ஆராய்ஞ்சு பாத்தோம்னா இந்த மாதிரி நிறைய விஷயங்கள் தெரிய வரும்.

      இன்னொரு முக்கியமான விஷயம் என்னன்னா, எல்லா கேரக்டருமே தாங்கள் செய்த தவறை உணர்ந்து அதுக்காக வருத்தப்பட்டுக்கொண்டு இருப்பவர்கள். உதாரணத்திற்கு, Earl தன் முதல் மனைவியையும் குழந்தையும் பிரிந்து வந்ததற்காக தற்போது வருந்துபவர், Linda தன் கணவ்னுக்கு துரோகம் இழைத்துவிட்டு தற்போது வருந்துகிறவள், Jimmy தன் மகளை மானபங்கப் படுத்திவிட்டு அதற்காக வருந்துபவன். ஆனால் இவர்கள் எல்லாரும் அந்தப் பாவத்திலிருந்து விடுபட செய்யும் முயற்சிகள் எல்லாமே தோல்வியில் தான் முடியும்.

      இந்தப் படத்தோட பேருக்குக்கூட மறைமுகமான காரணங்கள் உண்டு. "மாக்னோலியா" என்பது ஒரு பூவின் பெயர். இந்தப் பூச்செடிக்கு கேன்சர குணப்படுத்தற குணம் இருக்காம். இந்தப் படத்துல 2 பேருக்கு கேன்சர் இருக்கறதா வரும்.

      ஒருவேளை அந்த க்ளைமாக்ஸ் ஒரு ஃபேன்டசி, நம்ப முடியாத ஒரு விஷயம் அதனால தான் படம் எனக்கு பிடிக்கலனா வெல்.. உன் கருத்து மாறுபட வேண்டிய நேரம் இது. அந்த க்ளைமாக்ஸ் அறிவியல் பூர்வமா சாத்தியமாகக் கூடிய ஒன்றே. உண்மையிலேயே அந்த மாதிரி நடந்து இருக்காம். என்ன ஒன்னு..?? சின்ன லெவல்ல நடந்தத சினிமாவுக்காக பெரிய லெவெல்ல பண்ணிருக்காங்க. அவ்ளோதான்.

      நான் இந்தப் படம் எல்லாருக்கும் கண்டிப்பா பிடிக்கனும்னுலாம் சொல்ல மாட்டேன். ஏன்னா நிறைய மறைமுகக் குறியீடுகள் இருப்பதால வெகுஜன விரும்பிகளுக்கு பிடிக்காதுதான். ஆனாலும் இந்தப் படம் சொல்ல வர்றத தெரிஞ்சுக்கிட்டா பிடிச்சுப்போக வாய்ப்பிருக்கு. அதற்குரிய ஒரு சிறிய முயற்சி தான் இந்தப் பதிவு. (நானும் ஒரு வெகுஜன விரும்பி தான்..!!)

      Delete
  2. i dint tell tat i dint understand the film.whatever u have replied i had understood the same after watching the movie expect for the directors reason for frog rain.i understood all the மறைமுகக் குறியீடுகள் yet i dint like the climax.with all the characters who are hurt internally and searching for a solution to it there could have been a better way god might have helped them(as in ur words).it was very silly even if that is possible. the entire movie was building up to wat the secret behind their sorrow was and how they could get out of it.after revealing all the secrets till which i liked it by understanding the மறைமுகக் குறியீடுகள் ,one would have eagerly waited how they could find peace from it,and when they see a frog rain could provide peace it was ridiculous..all the tension build up was thrown away.a very sensible interesting solution for the characters peace would have made this film very inspirational film as people could have related that to them and wenever they r hurt they could have found inspiration from them rather than looking up and hoping for a frog rain.

    ReplyDelete
    Replies
    1. முகேஷ்,

      நான் சொன்னதயே நீ சரியா புரிஞ்சுக்கலனு நினைக்கறேன்.. அந்த க்ளைமாக்ஸ டைரக்டா அர்த்தம் புரிஞ்சுக்க கூடாது. நிஜ வாழ்க்கையில பிரச்சனைகள் வரும்போது அந்த மாதிரி க்ளைமாக்ஸ எதிர்பாத்துட்டா உக்காந்துருக்குறதுனு கேட்டிருக்க? இல்ல மாமா.. அது அந்த மாதிரி இல்ல.. அப்டி டைரக்டா புரிஞ்சுக்க கூடாது.. இது சக்திமான் காப்பாத்துவார்னு நினச்சு மாடி மேலருந்து கீழ குதிக்கற குழந்தைங்களோட மனநிலை மாதிரி இருக்கு..ஹா ஹா..(இப்ப எதுக்கு சம்பந்தமே இல்லாம பேசற.. ஹிஹி..இப்டித்தானே பேசி சமாளிக்க வேண்டியிருக்கு..)

      Delete
  3. வெகுஜன விரும்பி or cinema university phd vangnavano if film is adored universally by all then tat can be surely called a masterpiece.my point is that magnolia is not a masterpiece..

    ReplyDelete
    Replies
    1. அத நாந்தான் முன்னாடியே சொல்லிட்டேனே.. ரெண்டு வகையான ரசிகர்களும் இந்தப் படத்துக்கு இருப்பாங்கனு..!!
      உன்னப் பொறுத்தவரையில இது ஒரு மொக்க..!!
      என்னப் பொறுத்தவரையில இது ஒரு முக்கியமான படம்..!!
      அவ்ளோதான்..

      Delete
  4. யாரோ என்கிட்ட இந்த படம் கொடூரமான படம்ன்னு சொன்னாங்க, அதனாலயே படத்து மேல பெரிய ஈடுபாடு இல்லாம போயிருச்சு. உங்களோட இன்ட்ரோ படிச்ச அப்புறம் படத்தை பார்கிறதுன்னு முடிவு பண்ணிட்டேன். படம் பார்த்திட்டு அது கிளாச்சிக் வகையை சேர்ந்ததா இல்லை மொக்கையான்னு சொல்லறேன் தல.

    ReplyDelete
    Replies
    1. வாங்க தல,

      என்னாது கொடூரமான படமா..?? அடக்கடவுளே..!! இது என்ன பால் தாமஸ் ஆண்டர்சனுக்கு வந்த சோதனை..??

      கண்டிப்பா பாருங்க தல, பாத்துட்டு உங்க கருத்த சொல்லுங்க..!!

      Delete
  5. தல,
    நீங்க ரொம்ப நல்லா effort போட்டு எழுதுறீங்க. படிக்கவும் சுவாரிசியமா இருக்கு. நீங்க ஏன் உங்க பதிவை தமிழ்மணத்தில் இணைக்க கூடாது..?? இந்த லிங்க்ல போய் உங்க பதிவை தமிழ்மணத்தில் இணைத்து விடுங்க.

    http://www.tamilmanam.net/user_blog_submission.php

    அதுக்கு முன்னாடி கீழ இருக்கிற லிங்க்ல தமிழ்மணம் Username ஒன்னு கிரீயேட் பண்ணிடுங்க.

    http://www.tamilmanam.net/login/register.php

    உங்களுக்கு தமிழ்மணம் சார்பாக ஒரு மெயில் வரும், அது வந்த அப்புறம் உங்க பதிவை தமிழ்மணத்தில் இணைத்து விடலாம்.

    பதிவை இணைக்க http://www.tamilmanam.net/index.html லிங்க் போய் "இடுகைகளைப் புதுப்பிக்க" என்கிற பெட்டியில உங்க blog அட்ரஸ் குடுத்தா போதும்.

    வேற எதாவது சந்தேகம் இருந்தா என்னை மெயிலில் தொடர்பு கொள்ளவும்.

    ReplyDelete
    Replies
    1. தல,

      எனக்கு இந்த தமிழ்மணம் பத்திலாம் ஒன்னும் தெரியாது. இதுல சேத்தா என்னா பலன்-னும் தெரியாது. :)

      ஆனா அன்போட நீங்க சொல்றத என்னால தட்ட முடியல. நீங்க சொன்ன ஒரே காரணத்துக்காக இணைச்சிட்டேன். :) இன்னும் 48 மணி நேரம் கழிச்சு தான் எதையும் சொல்ல முடியும்னு சொல்லிருக்காங்க..!! அடுத்து என்னா பண்றதுனு நீங்க தான் வழிநடத்தனும் சொல்லிப்புட்டேன் ஆமா.. :) :)

      உங்க அன்புக்கு மிக்க நன்றி தல.. :)

      Delete
  6. இல்ல தல,
    நீங்க நல்லா எழுதுறீங்க, அதுவும் இல்லாம ரொம்ப effort போட்டு ஒவ்வொரு படத்தையும் பத்தி ரொம்பவே நுணுக்கமா எழுதுறீங்க, தமிழ்மணம் போன்ற திரட்டிகளில் உங்க பதிவை இணைச்சா, நிறைய பேரை உங்க பதிவு சென்றடையும், வேற ஒன்னும் இல்ல தல.

    ReplyDelete
    Replies
    1. தல,

      மும்பை எக்ஸ்பிரஸ் படம் பாத்துருக்கீங்களா? அதுல கமல், சந்தானபாரதியோட குழந்தைய கடத்திட்டு, பணம் கேட்டு மிரட்டுவாரு. 25 லட்சம் கேக்கலாம்னு நினச்சிருப்பாரு. ஆனா சந்தான பாரதி கொஞ்சம் கொஞ்சமா 1 கோடி வரைக்கும் ஏத்தி தரேன்னுவாரு. உடனே கமல், "சார் சார்.. இதுக்கு மேல ஏத்தாதிங்க சார்.. என்னால தாங்க முடியாது"ன்னுவாரு.

      நீங்க இப்டி புகழ்றதும் அப்டி தான் தல இருக்கு. இதுக்கு மேல என்னால தாங்க முடியாது. ஒரு ஆர்வத்துல ப்ளாக் ஆரம்பிச்சதுக்கு இப்டி புகழ்ந்து தள்றீங்க. பெரிய ஆளு நீங்க என்ன புகழ்றது உண்மையிலேயே கொஞ்சம் கூச்சமா இருக்கு தல..ஹி ஹி..

      ஆனாலும் கண்டிப்பா பொறுப்புணர்ச்சி கூடுது. அடுத்தடுத்து கண்டிப்பா நல்லா எழுத முயற்சி பண்ணுவேன்.

      மிக்க நன்றி தல.

      Delete

About Me

ஒரு நாளைக்கு ஒரு திரைப்படம் அல்லது ஓரு டிவி எபிசோடாவது பார்க்க வேண்டும் என்பதை கொள்கையாக வைத்துக்கொண்டு அதைக் கடைப்பிடிக்க முயற்சி செய்யும் தீவிர சினிமா ரசிகன் நான். அதை எழுத்தில் கொண்டு வர செய்யும் முயற்சியே இந்த ப்ளாக்.

மேலும் என்னைப்பற்றித் தெரிந்துகொள்ள

Welcome to Killadiranga - எனக்குப் பிடித்த சினிமா பற்றி என் பார்வையில்!!

Contact Me

Name

Email *

Message *